ARTICLE AD BOX
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில், அருள்ராஜ், பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், எங்கும் எளிதில் கிடைக்குமளவுக்குப் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இதனால், பறிபோன உயிர்கள் ஏராளம். குறிப்பாக, கஞ்சா போதையில், பல கொலைகள் நடந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணமாகக் கஞ்சா புழக்கம் இருக்கிறது.
ஆனால், தமிழக அரசு, கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை முதல் குமரி வரை, எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கே கஞ்சா விற்பனை கோலோச்சுகிறது. தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்கிறது என்பதைக் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.
தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்களே.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம், விழுப்புரம் சூப்பர் மார்க்கெட் ஒன்றில்,இப்ராஹிம் என்பவர் கஞ்சா போதை ஆசாமிகளால் கொல்லப்பட்டது, கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கஞ்சா போதையில் புவனேஷ்குமார் என்ற கல்லூரி மாணவனைக் கொலை செய்தது, கஞ்சா வியாபாரப் போட்டி காரணமாக, சென்னை கொடுங்கையூரில் பிரபல ரௌடி கருப்பா என்ற ரகுபதி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டது, கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கஞ்சா கும்பலால் கொலை செய்யப்பட்டது, பெருங்களத்தூரில், கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக இரட்டைக் கொலை, கடந்த ஜூன் மாதம், திருத்தணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் கொலை என, கஞ்சா புழக்கத்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் கணக்கே இல்லை.
தினமும் காலையில் கிளம்பி ஷூட்டிங் நடத்தச் சென்று கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? தன் வீடு, தன் குடும்பம் என்பது மட்டுமே நோக்கம் என்று வாழும் உங்கள் கையாலாகாத்தனத்தால் எத்தனை உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
