ARTICLE AD BOX
ஜூனியர் நடிகர்களின் வேதனை
ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள் ஒன்றோ இரண்டோதான் இருக்கும். ஆனால் அந்த காட்சியும் படத்தில் வருமா என்று தெரியாது. தேவையில்லாத காட்சி என்று அதனை நீக்கிவிட பல வாய்ப்புகள் உள்ளன. அப்படி பலருக்கும் நடந்தது உண்டு. இதே போன்று ஒரு சம்பவம்தான் பிரபல காமெடி நடிகரான பிளாக் பாண்டிக்கு GOAT திரைப்படத்தில் நடந்ததாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சண்ட போட்டு வாய்ப்பு வாங்குனேன்
“நான் GOAT திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டுத்தான் அந்த வாய்ப்பை வாங்கினேன். சென்னை 28 திரைப்படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. அப்போது நான் சின்ன பையனாக இருந்ததால் என்னை நடிக்க வைக்கவில்லை. எனக்கு பதில் நானே எனக்கு தெரிந்த ஒரு பையனை அதில் நடிக்க அனுப்பினேன்.
தெரிந்த நீங்களே எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வேறு யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறார் என்று சண்டை போட்டேன். அதன் பின் வெங்கட் பிரபு என்னை GOAT படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் நான் நடித்த காட்சிகளை தூக்கிவிட்டார்கள். ஒரே ஒரு ஷாட்டில் ஓரத்தில் மட்டும் நான் தெரிவேன். நானே கையைக்காட்டி அது நான் தான் என்று கூறவேண்டும். அப்போதுதான் அது நான் என்றே தெரிய வரும்.
என்னை நடிக்க வைத்ததற்கு நான் வெங்கட் பிரபு அண்ணனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவரிடம் சென்று ஏன் நான் நடித்த காட்சியை தூக்கிவிட்டீர்கள் என்று என்னால் கேட்க முடியாது. நான் வாய்ப்பு கேட்டேன், அவர் நடிக்க வைத்தார் அவ்வளவுதான்” என்று மனம் நொந்தபடி இச்சம்பவத்தை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் பிளாக் பாண்டி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” தொடரின் மூலம் அறிமுகமானவர் பிளாக் பாண்டி. அதனை தொடர்ந்து “ஆட்டோகிராஃப்”, “கில்லி”, “அங்காடித் தெரு” போன்ற பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இப்போதும் பல திரைப்படங்களில் பிளாக் பாண்டி நடித்துக்கொண்டிருந்தாலும் பரவலாக அறியப்படவில்லை.