ARTICLE AD BOX
அமலாக்கத்துறை ரெய்டு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக திமுகவுக்கு நெருக்கமான பல புள்ளிகளின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும்.
ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான பல ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ரொக்கமாக பல கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் இவர்கள் மூவரும் அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
ஆகாஷ் பாஸ்கரன் தனது “Dawn Pictures” மூலமாக தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின் “பராசக்தி”, சிம்புவின் “STR 49” ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்திற்கு பதிலாக டீலிங்?
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, “பராசக்தி” திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.70 கோடி சம்பளமாக பேசப்பட்டதாகவும் ஆனால் இதற்கு பதிலாக ஆகாஷ் பாஸ்கரன் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சிவகார்த்திகேயனின் வீட்டை இடித்துவிட்டு ரூ.70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டித்தருவதாகவும் டீல் பேசியிருந்தாராம். இதற்கு சிவகார்த்திகேயனும் சரி என்று ஒப்புக்கொண்டாராம். இவ்வாறு பிஸ்மி கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய புள்ளியாக சிக்கியுள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்.