ARTICLE AD BOX
கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிட வேலைகள் நடைபெறும் பகுதியில் இன்று சிறுத்தை நடமாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், வனத் துறையினர் தற்போது அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதிப்படுத்த அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி உள்ளனர். மேலும், சிறுத்தையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஏலகிரியில் திருமணம், ஊட்டியில் தேன்நிலவு : மோகம் முடிந்ததும் காதல் மனைவியை கைவிட்ட இன்ஸ்டா காதலன்!
பல்கலைக் கழக நிர்வாகத்தினர், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத் துறையினரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். சிறுத்தை பிடிபடும் வரை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திற்குள் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், சிறுத்தை நடமாட்டம் காரணமாக பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நாளை பல்கலைக் கழக மைதானத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்று நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், பல்கலைக் கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது மாணவர்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
