ARTICLE AD BOX
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சிறுமலை. 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த சிறுமலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த வகையில், திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்குச் செல்லும் மலைப்பாதையின் 17வது கொண்டை ஊசி வளைவு அருகில், வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள வாட்சிங் டவர் உள்ளது.
இந்த நிலையில், இதன் அருகே துர்நாற்றம் வீசுவதாக, மலைச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கும், திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சிறுமலை வனத்துறையினர், அங்கு மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதைப் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில், இறந்தவரின் உடல் அருகே பேட்டரி வயர்கள் கிடந்துள்ளது. எனவே, இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், கியூ பிரிவு போலீசார், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டெட்டனேட்டர் பயன்படுத்தும் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு நபர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இவர் கேரளா இடுக்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!
ஆனால், எதற்காக இவர் கேரளாவிலிருந்து திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு வந்தார்? டெட்டனேட்டரை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார். வேறு ஏதும் தீவிரவாத சதி ஏதும் நடைபெற்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்தது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே, பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை முகாமிட்டுள்ளது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
