ARTICLE AD BOX
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம்
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் “நாயகன்” திரைப்படத்தை அடுத்து 38 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் இன்று கர்நாடகா மாநிலத்தை தவிர உலகமெங்கும் வெளியானது. இதில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், பகவதி பெருமாள், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி என்பதால் “நாயகன்” திரைப்படத்தை விட இத்திரைப்படம் அதிரடியாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன்தான் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்குச் சென்றார்கள். ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
படத்தின் கதை
கமல்ஹாசன் டில்லியில் ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டராக இருக்கிறார். அவரது கூட்டளிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் சிறுவயது சிம்புவின் தந்தை கொல்லப்படுகிறார். இந்த துப்பாக்கிச் சூட்டில் தனது தங்கையையும் பிரிந்துவிடுகிறார் சிம்பு.
ஆதரவற்று இருக்கும் சிம்புவை கமல்ஹாசன் தத்தெடுத்து வளர்க்கிறார். சிம்பு வளர வளர கமல்ஹாசனுக்கு அவர் மீது பிணைப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சிம்புவை தனது கேங்கஸ்டர் உலகின் அடுத்த தலைவனாக அறிவிக்கிறார். இந்த சமயத்தில் கமல்ஹாசன் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமே சிம்புதான் என சந்தேகப்படுகிறார். இதனால் சிம்பு மனமுடைந்துப்போகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் கமல்ஹாசனை சிம்பு மூலம் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். இதன் பின் கமல்ஹாசனுக்கும் சிம்புவுக்கும் என்ன ஆனது என்பதுதான் மீதி கதை.
படத்தின் பிளஸ்
திரைப்படத்தில் ரவி கே சந்திரனின் கேமரா கோணம் அனைத்தும் வியக்க வைக்கின்றன. அதே போல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அற்புதமாக அமைந்திருக்கிறது. மேலும் சிம்புவின் நடிப்பு பார்வையாளர்களை அசரவைக்கிறது. கமல்ஹாசனையே நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் சிம்பு என்றுதான் கூறவேண்டும். கமல்ஹாசனுக்கும் சிம்புவுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் மிரள வைக்கின்றன. அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதமும் அதனை படமாக்கிய விதமும் சிறப்பு. திரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கிறது. அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், வையாபுரி, பகவதி பெருமாள் ஆகியோருக்கு சின்ன சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் மைன்ஸ்
மொத்த திரைப்படத்தின் திரைக்கதையே படத்தின் பலவீனமாக இருப்பதுதான் சோகம். கதையும் அரதப்பழசான கதை என்பதால் பார்வையாளர்களுக்கு எந்த வித சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை. கதையம்சத்தில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எல்லாமே பார்வையாளர்களால் யூகிக்கக்கூடியதாகவே இருந்தது. இதன் காரணமாகவே ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டி விடுகிறது.
அதுமட்டுமல்லாது திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதால் பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்துவிடுகிறது. பாடல்களையாவது சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று பார்த்தால் ஜிங்குச்சா பாடலைத் தவிர மற்ற எந்த பாடல்களும் முழுதாக படத்தில் இடம்பெறவில்லை. ஆதலால் ரசிகர்களை பெரிதும் கடுப்பேற்றியுள்ளது “தக் லைஃப்”
மொத்தத்தில் “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.

5 months ago
62









English (US) ·