ARTICLE AD BOX
சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.
சட்டப்பேரவை நிகழ்வுகளில் தனித்தே செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன். இதனிடையே டெல்லி மேலிடம் சென்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானை தனியாக சந்தித்து வந்தார் செங்கோட்டையன்.
அவர் சந்தித்து வந்த மறுநாளே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. சென்னை வந்த அமித்ஷா, தேஜ கூட்டணியில் அதிமுக இணைந்ததாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தார்.
இதனிடையே இபிஎஸ் உடன் மோதல் போக்கை தொடர்ந்து வந்த செங்கோட்டையன், நேற்று மனம் திறந்து பேச உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்து, அதற்குள் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க முடிவெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.

இந்த நிலையில் இன்று காலை இபிஎஸ் மூத்த நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின், செங்கோட்டையன் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
அதிமுக அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.
இனி செங்கோட்டையன் வேறு கட்சி தாவுவாரா? அல்லது அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து வேறு ஏதும் முடிவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
