ARTICLE AD BOX
அடுத்த 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி தரப்பு பதிலளிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
டெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூனில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் அவருக்கு, மீண்டும் அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வகையில், இந்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்னானது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது எனக் குறிப்பிட்ட உத்தரவு இல்லை. இதுதொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்கிறோம். இதற்கு அவகாசம் வழங்குங்கள்” என செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், “அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராகத் தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்கக் கூறி இருந்தோம்? ஆனால், அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இதையும் படிங்க: படத்தை ட்ரோல் செய்தால் என்ன ஆகும்னு தெரியுமா..’கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை.!
மேலும், கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை, அதற்காக நீங்கள் அதனை அனுகூலமாக எடுத்துக் கொள்வீர்களா? இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையேக் காட்டுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காலஅவகாசம் வழங்க முடியாது” எனக் கூறியது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது டாஸ்மாக் முறைகேடு அறிக்கையும் உள்ளதால், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
