ARTICLE AD BOX
மாற்றி மாற்றி அறிக்கை
ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினரின் பிரிவிற்கு பின் ஆர்த்தியின் தாயார் பணத்திற்காக ரவி மோகனை பயன்படுத்திக்கொண்டார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது மட்டுமல்லாது கெனீஷாவும் ரவி மோகனும் ஜோடியாக கலந்து கொண்ட திருமண விழா வீடியோக்கள் சில நாட்களுக்கு முன் வைரல் ஆன நிலையில் ஆர்த்தி மிகவும் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ரவி மோகன், கொடுமையான ஒரு வாழ்க்கையில் இருந்து மீண்டு வந்ததாகவும் தனது குழந்தைகளையே சந்திக்க அனுமதி தரவில்லை எனவும் 4 பக்கங்களுக்கு தனது ஆதங்கத்தை கொட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறு மாறி மாறி இருவரும் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் ரவி மோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பொய்கள் உண்மையாகிவிடும் என்பதால் விளக்கம்…
“கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னை பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்துவிட்டேன். இப்போது நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்.
2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை திரு.ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் மீண்டும் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார்.
அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை என் மாப்பிள்ளை திரு.ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில்தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
அடங்க மறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்கள் மாப்பிள்ளை திரு.ஜெயம் ரவியை வைத்து தயாரித்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.100 கோடி ஃபைனான்சியர்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அதில் 25 சதவிகிதத்தை திரு.ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்கிற்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
இப்பொழுது திரு.ஜெயம் ரவி அவர்கள் இந்த படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.
ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிற ஃபைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். இன்று வரை அந்த கடன்களுக்காக நான் மட்டுமே வட்டி கட்டி வருகிறேன்.
சைரன் பட வெளியீட்டின்போது கூட திரு.ஜெயம் ரவி அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக்கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை.
திரு ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பேற்க வைத்ததற்கான வேண்டாம்… ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அவர் அதை எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை” என சுஜாதா விஜயகுமார் தனது அறிக்கையில் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

5 months ago
79









English (US) ·