ARTICLE AD BOX
ஸ்ரீகாந்தை சிறையில் அடைத்த நீதிமன்றம்
சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் மது விடுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அதிமுக முன்னாள் IT Wing நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியது காவல்துறை. அப்போது அவருக்கு பிரதீப் என்பவர் போதை பொருள் சப்ளை செய்தது தெரியவர, பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர்.
பிரதீப்பை விசாரிக்கையில் பிரசாத் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கரை” என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி தன்னிடம் பிரசாத் கொக்கைன் வாங்கிச் சென்றதாகவும் பிரதீப் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் ஸ்ரீகாந்த் உண்மையில் போதை பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் 14 ஆவது பெருநகர நீதிமன்றத்தின் முன் அவர் ஆஜர் செய்யப்பட்டார். வருகிற ஜுலை 7 ஆம் தேதி வரை ஸ்ரீகாந்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Gpay மூலம் பணம் அனுப்பிய ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் பிரதீப்பிற்கு ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் பணம் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருட்கள் வாங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்ரீகாந்தை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு முதல் வகுப்பு சிறை கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பில் கட்டில், தலையணை, செய்தித்தாள் படிக்கும் வசதி போன்றவைகள் இடம்பெற்றுள்ளனவாம். மேலும் ஸ்ரீகாந்தை அவரது உறவினர்கள் சந்திக்க வாரம் இருமுறை அனுமதி உண்டு எனவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தேதிகளில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு கோழிக்கறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.