ARTICLE AD BOX
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: டாஸ்மாக் ஊழல் முறைகேட்டைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இன்று பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடன் இருந்த பாஜக தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல், பாஜக தலைவர்கள் வினோஜ் பி. செல்வம் ஆகியோரையும் காவல்துறை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
அதேநேரம், தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பாஜகவினர் கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடை நடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?.
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
மேலும், போரட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அண்ணாமலை புறப்பட்ட நிலையில், அக்கரையில் வைத்து காவல்துறை அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டியில், “நானும் பாஜக நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களைக் கைது செய்கிறார்கள்.
நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்குச் செல்லும் பாஜகவினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் குற்றவாளி. செந்தில் பாலாஜி 2வது குற்றவாளிதான். ஒரு அமைச்சருக்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?
டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலீசாரின் மீது நம்பிக்கை இருந்ததால், தேதி அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். அப்போது என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம். பாஜக மீதான பயத்தின் காரணமாக போராட்டம் தடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தாலியைப் பறித்த பெற்றோர்.. பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். பயம் இருந்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் நல்ல அரசியலைக் கொண்டு வர பாஜக போராடுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து திமுக தேர்தலைச் சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து திமுக சந்திக்க உள்ளது” எனத் தெரிவித்தார்.