ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க முடியாது
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் கலந்துகொண்டார்.
அப்போது அவரை குறித்து பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கும்போதே உயிரே, உறவே, தமிழே என்று தொடகினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என்று பேசியிருந்தார்.

இவர் இவ்வாறு பேசியதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அது மட்டுமல்லாது கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என கண்டனம் தெரிவித்தார். கன்னட அமைப்பினர்கள் பலரும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கூறினார்கள்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய கமல்ஹாசன், “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என பகிரங்கமாக கூறினார்.
ஜெயலலிதாவிடமே கெத்து காட்டியவர்
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், “கபாலி படத்தில் கபாலி என்று கூப்பிட்டவுடன் கையை கட்டிக்கொண்டு சொல்லுங்க எஜமான் என்று சொல்கிற கபாலி என்று நினைச்சியாடா, கபாலிடா என்று ஒரு வசனம் வரும். அதே போல்தான், கமல் என்று சொன்னவுடன் கையை கட்டிக்கொண்டு சொல்லுங்க எஜமான் என்று சொல்வதற்கு அவர் என்ன வெறும் கமலா? கமல்ல்ல்ல்டா.
கமல் தன்னுடைய தனி நபர் திமிரில் இருந்து கீழே இறங்கி வருபவர் அல்ல. விஸ்வரூபம் விவகாரத்தில் ஜெயலலிதாவையே அவர் எதிர்த்து நின்றார். வேறு யாராக இருந்திருந்தாலும் கடைசி வரைக்கும் காலில் விழுந்து கிடந்திருப்பார்கள். ஆனால் நடப்பது நடக்கட்டும் என்று நினைத்த கமல் பொதுவில் வெளிப்படையாகப் பேசத்தொடங்கினார். ‘எனக்கு பல நெருக்கடிகள் இருக்கிறது. இந்த நெருக்கடிகளால் நான் பாதிக்கப்பட்டால் நிச்சயம் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிற வேறு வழி இல்லை’ என்று அவர் கூறியபோது மொத்த அனுதாபமும் கமல் மீது திரும்பியது. அவர் ஒரு முடிவெடுத்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார். இந்த விஜய் டயலாக் கமல்ஹாசனுக்குதான் பொருந்தும்” என பேசியுள்ளார்.