ARTICLE AD BOX
தள்ளிப்போன தக் லைஃப் வெளியீடு
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று கூறியது கர்நாடகா மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் அங்குள்ள கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கமல்ஹாசன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து கூறினீர்கள்? நீங்கள் என்ன மொழியியல் ஆய்வாளரா?” என கேள்வி எழுப்பியது. மேலும் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடகா பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் அவர் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.
இந்த நிலையில் “மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ” என நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதற்கு கமல்ஹாசன் “தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்கவேண்டும், தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க?” என கூறினார்.
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் கர்நாடக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்கமல் நிறுவனம் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு வேண்டுகோளும் விடுத்துள்ளது.
கொந்தளிக்கும் தமிழர்கள்!
இந்த நிலையில் “கர்நாடக நீதிமன்றம் கன்னடர்களுக்கே ஆதரவாக பேசுகிறது” என தமிழர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் “தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது. இது முற்றிலும் உண்மை. இதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது “இனி தமிழில் எந்த கன்னட திரைப்படங்களையும் வெளியிட கூடாது” எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார். “கேஜிஎஃப் 3”, “காந்தாரா சேப்டர் 1” ஆகிய கன்னட திரைப்படங்களுக்கு தமிழகத்தில் அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.