ARTICLE AD BOX
வடசென்னை 2?
வெற்றிமாறன்-சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் அப்புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இந்த நிலையில் வெற்றிமாறன்,சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் “வடசென்னை 2” என தகவல் பரவியது.
எனினும் இத்திரைப்படம் “வடசென்னை” திரைப்படத்தில் இடம்பெற்ற சில அம்சங்களை பயன்படுத்தி எடுக்கப்படவுள்ளதாகவும் வேறொரு தகவல் வெளிவந்தது. அது மட்டுமல்லாது சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்காக “வடசென்னை” படத்தின் சில அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள வெற்றிமாறன் தனுஷின் அனுமதி கேட்டபோது தனுஷ் வெற்றிமாறனிடம் ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் பரவியது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ் என்னிடம் பணம் கேட்டார்?
“நான் சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் வடசென்னையின் இரண்டாம் பாகமா என்று சில யூகங்கள் இருக்கிறது. ஆனால் இது வடச்சென்னை 2 கிடையாது. வடசென்னை 2 என்பது அன்புவின் எழுச்சிதான். தனுஷ்தான் அதில் நடிப்பார். ஆனால் நான் சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் “World of Vadachennai”.
அதாவது வடசென்னை திரைப்படத்தில் சில கதாபாத்திரங்களும் அம்சங்களும் சிம்புவின் படத்திலும் இருக்கும். தனுஷ்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். அவர்தான் அதன் காப்பிரைட்டுக்கு உரிமையாளர். அப்படி இருக்கும்போது அவரது படைப்பில் இருக்கும் சில விஷயங்களை மற்றொரு படத்திற்கு இன்னொருவர் பயன்படுத்தும்போது பணம் கொடுங்கள் என கேட்பது சட்டப்படி சரியே. அதை தவறாக பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.
எனினும் அதே வேளையில் உண்மை என்னவென்றால், தனுஷிடம் சிம்பு படத்தை பற்றி கூறியபோது, ‘உங்களுக்கு என்ன Comfortable ஆக இருக்கிறதோ அதை செய்யுங்கள். நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம். பணம் எதுவும் வேண்டாம்’ என அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் தனுஷை பற்றியோ என்னை பற்றியோ இணையத்தளத்தில் தவறாக பேசுவது எனக்கு உவப்பாக இல்லை” எனவும் கூறியுள்ளார்.
“வடசென்னை” திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து சிம்புவின் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் வெற்றிமாறன் இதனை உறுதிபடுத்தியுள்ளார். “வடசென்னை” திரைப்படத்தில் அமீர் ஏற்று நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கும் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.