ARTICLE AD BOX
நான் யாரையும் காப்பியடித்துப் பின்பற்றவில்லை என தனுஷ் பாணியில் பயணிப்பதாக் எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சென்னை: டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம், நீங்கள் நடிகர் தனுஷைப் பின்பற்றுவது போன்று தெரிகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இதைப் பற்றி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.
நான் யாரையும் காப்பியடித்துப் பின்பற்றவில்லை. என் உடலமைப்பை வைத்து அப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் கண்ணாடியைப் பார்க்கும் போது, நான் என்னைத்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதே கேள்விக்கு பதிலளித்த அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “உங்கள் கண்ணுக்குத்தான் நீங்கள் பார்க்கும் நடிகரைப் போல் தெரிகிறார்.
என் கண்ணுக்கு அவர் பிரதீப் ரங்கநாதனாகவேத் தெரிகிறார். அவர் அவராகவே இருக்கிறார். என் கண்ணுக்கு நீங்கள் கூறும் நடிகரைப் போல் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். முன்னதாக, தனுஷின் கமர்ஷியல் படங்களைப் போலவே பிரதீப் ரங்கநாதன் பயணிக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

டிராகன் வெற்றி: கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: ப.சிதம்பரம் அப்படிச் செய்யும்போது என்ன செய்தீர்கள்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
அது மட்டுமல்லாமல், உலகமெங்கும் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்த வசூலில் சுமார் ரூ.50 கோடியைக் கடந்துவிட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இப்படத்தின் பட்ஜெட்டே ரூ.40 கோடிக்கும் கீழ் என்பதே ஆச்சரியமான தகவல்.
