ARTICLE AD BOX
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல இந்தியர்கள் மீளவே இல்லை. இத்தாக்குதலில் 22 சுற்றுலாப்பயணிகள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உட்சகட்ட கோபத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாகியுள்ளனர் இந்தியர்கள்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா பாகிஸ்தானியர்களை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்!
“ரெட்ரோ” திரைப்பட விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, “பாகிஸ்தானியர்கள் குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள்” என கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்து பழங்குடியினர்களை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அதன் பின் இவ்வாறு தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் விஜய் தேவரகொண்டா. எனினும் அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.