ARTICLE AD BOX
கோவை மாவட்டம் சூலூர் செலக்கரிச்சலைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50) என்பவரது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இவர் ஜவுளித் தொழில் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மகன் வெங்கடேஷ், திமுக மாணவரணி ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.சில மாதங்களுக்கு முன், ராமச்சந்திரன் வங்கிகளில் பெற்ற கடன்களை ஒரே நேரத்தில் செலுத்தியதாகவும், அந்தப் பணத்தின் மூலம் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல், தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதல் அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடையாறில் மருத்துவர் இந்திரா என்பவரது வீட்டிலும், வேளச்சேரியில் கட்டுமானத் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. இவர்கள் மீது பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான புகார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டிலும் சோதனைகள் தொடர்கின்றன.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு மோசடி புகார்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொள்ளும் இத்தகைய தீவிர நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
