ARTICLE AD BOX
கமல்ஹாசன் எழுதிய கடிதம்
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது” என கூறியது கர்நாடகாவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கன்னட அமைப்புகளும், “தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது” என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் கூறவே “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கர்நாடகா ஃபிலிம் சேம்பர் அத்திரைப்படத்தை தடை செய்துள்ளது.
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் வெளியிட வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கமல்ஹாசன். இவ்வழக்கை இன்று காலை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடக பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் தான் அவ்வாறு கூறியதாகவும் கன்னட மொழியை எந்த விதத்திலும் குறைத்து பேசவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“கன்னடர்களையும் அவர்களது மொழி பற்றையும் நான் மதிக்கிறேன். தமிழைப் போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை” எனவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
தக் லைஃப் ஒத்தி வைப்பு
கமல்ஹாசன் இவ்வாறு கடிதம் எழுதியதை தொடர்ந்து, கர்நாடக நீதிமன்றம் “மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள். கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே” என்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் எனவும் ராஜ்கமல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5 months ago
52









English (US) ·