ARTICLE AD BOX
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின்போது, ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏமான கடம்பூர் ராஜு பேசினார். அப்போது, “கணக்கு கேட்டு தொடங்கிய கட்சிதான் அதிமுக. 2026ஆம் ஆண்டில் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார்” எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கணக்கு கேட்டு கட்சி தொடங்கிய நீங்கள், தற்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” எனக் கூறினார். அப்போது எழுந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவர் போடும் கணக்கு சரியாக வரும்” என அண்ணாமலை ராதாரவி பாணியில் பேசினார்.
இதனையடுத்து, அமைச்சர் ஐ. பெரியசாமி, “கடந்த ஆட்சியின் போது தாய் திட்டத்தை கைவிட்டதன் மூலம் தாயையே அதிமுக மறந்துவிட்டது” என மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தாய் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. எங்களையெல்லாம் வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை எந்நாளும் நாங்கள் மறக்க மாட்டோம்” என்றார்.

இவ்வாறு மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் கூட்டல் கணக்கு விவாதம் நடைபெற்றது. முன்னதாக, அதிமுகவின் தொண்டர்களின் எதிர்காலத்திற்கான கூட்டல் கழித்தலில் ஏமாறாமல் இருந்தால், அதற்கு தன் வாழ்த்துக்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 2026 பாஜக கனவு பலிக்குமா அண்ணாமலைக்கு செக்.. அதிமுக இரட்டை கணக்கு!
மேலும், நேற்று டெல்லி சென்ற இபிஎஸ்சை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், டெல்லி சென்றது எதற்கு என்று தெரியும் எனவும், அப்படியே மக்கள் பிரச்னையைச் சொல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் அதிமுகவின் கூட்டணி கணக்கு குறித்து சட்டப்பேரவையில் விவாதம் எழுந்துள்ளது.

Tags: AIADMK Alliance, AIADMK BJP alliance, I periyasamy, Kadambur Raju, sp velumani, அதிமுக, அதிமுக பாஜக கூட்டணி, எஸ்பி வேலுமணி, ஐ பெரியசாமி, கடம்பூர் ராஜு, கணக்கு