ARTICLE AD BOX
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், வெற்றி வியூகத்திற்காக தற்போதே பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
பாமக, தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணி என்று சொல்லவில்லை. ஏற்கனவே தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அதே போல பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த நிலையில் பாமகவில் தந்தை – மகன் மோதலால் அடுத்த என்ன நடக்கும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
சீமான் இந்த முறையும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகமோ திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளதால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, மாநிலங்களவை சீட் கேட்டுத்தான் 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி போட்டதாகவும், அதிமுக கண்டிப்பாக ஒரு சீட் தரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால் அதிமுக தரப்போ இருக்கும் இரண்டு மாநிலங்களவை சீட்டை தங்கள் கட்சிக்கே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இன்று திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, தேமுதிக வாழ்த்து கூறியிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள X தளப்பதிவில், இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிகவுன் இந்த திடீர் புகழாராம், திமுகவுடன் கூட்டணி போடுவதற்கான அச்சாரமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.