ARTICLE AD BOX
திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ளார்.திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு, செலவு கணக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முருகனுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி, குட்டு பகுதியில் முருகனின் ஸ்கார்ப்பியோ காருக்குள் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீஸார் இறந்தவர் உடலை கைப்பற்றினர். பின் திண்டுக்கல்லில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்டவர் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திமுக பிரமுகரும், மாநகராட்சி ஒப்பந்ததாரர் முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று 5 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கொலை வழக்கு சம்பந்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், மேட்டுப்பட்டி வீரபத்திரன் (34), ரவுண்ட் ரோடு சேக் பாரீத் (29), கோவிந்தாபுரம் சரவணகுமார் (38), சங்கர் (33), செல்லாண்டியம்மன் கோயில் ராஜா (41), ஆர்.எம்.காலனி விஜய் (28), விஜயகுமார் (24), செல்லாண்டி அம்மன் கோயிலை அசோக்(41) ஆகியோர் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட 8 நபர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
