ARTICLE AD BOX
கட்சிக் கொடிகளை அகற்றக்கோரி திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவிட்டது, தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டதாக சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
தேனி: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், துரைமுருகனின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பெ.சண்முகம், “துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களைப் போன்றவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு குறித்து, மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.
இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, அந்த தீர்ப்பு குறித்து கலந்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல் நாங்கள் தன்னிச்சையாக அகற்றிக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். இது திமுகவின் சொந்த பிரச்னை அல்ல. அரசியல் கட்சி, கொடி என அனைத்தும் சட்டத்தில் இருக்கக்கூடிய விஷயம்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறினால் சரியாக இருக்கும். எனவே, திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதிமன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் எனத் தெரியவில்லை. சமீப காலமாக நீதிபதிகள் எல்லை மீறுகின்றனர்.
அதன் தொடர்ச்சிதான், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் கட்டணம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். போலீசாரிடம் அனுமதி கேட்டால்தானே கட்டணம் செலுத்த வேண்டும். இனி அனுமதி கேட்க மாட்டோம்.
இதையும் படிங்க: திருநங்கை கொடூர கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலன் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!
ஏனென்றால், எங்களின் செந்தொண்டர் படை போதும் பாதுகாப்பிற்கு. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், கருத்தரங்கு, மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமை. ஆனால், அதனை மீறும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் பழைய தீர்ப்பை கடந்த மார்ச் 6ஆம் தேதி உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.