ARTICLE AD BOX
மதுரை மாவட்டம் விராதனூர் அருகே ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் ஆடு-மாடுகள் மாநாட்டை நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சீமான் ஆடு-மாடுகளின் உரிமைகள் குறித்து உரிமையுரை நிகழ்த்தினார். அப்போது பேசி அவர், ‘பாலில் மிகப் பெரிய சந்தை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால் ரூ.50 ஆயிரம் கோடி மட்டுமே வருமானம் தருகின்ற சாராயத்தை விற்று மக்களை சாகடிக்கிறார்கள்.
பால்வளத்துறை, கால்நடைத்துறை என்று வைத்துள்ள அரசு மாடுகளே இல்லாமல் பால் கறந்துவிட முடியுமா? செருப்பு, தோள்பை ஆகியவற்றிற்கு மாடுகளின் தோல் தேவைப்படுகிறது. ஆனால், அவை உண்பதற்கான வைக்கோல் உள்ளதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளுக்குள் மேய்ச்சல் சென்றவர்களால் அழியாத காட்டு வளம், தற்போது மட்டும் அழிவதாக எப்படிச் சொல்கிறீர்கள்..?
நொய்யல், வைகை போன்ற ஆறுகளை எல்லாம் சாக்கடைகளாக மாற்றிவிட்டு, ஆற்று மணலை, மலையை வெட்டி விற்றுவிட்டு, காடுகளில் கால்நடைகள் மேய்ந்தால் அங்குள்ள வளங்களுக்கு ஆபத்து என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
கேரள மாநிலத்தின் தேவைகளுக்காக இங்கிருந்து மலைகள் உடைத்தும், மணலைச் சுரண்டியும் அங்கே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அவர்களது மாநிலத்திலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கிறார்கள்.
நம்மிடருந்து வளங்களைக் கொண்டு சென்று, பதிலுக்கு குப்பைகளை இங்கே வந்து கொட்டுகிறார்கள். காடுகளின் ஆன்மாவை காக்கின்ற சமூகம் ஆயர்களும், மலை வாழ் மக்களும்தான்.
பரமாத்மா கண்ணன், இறை தூதர் நபிகள் நாயகம், இயேசுபிரான் ஆடு, மாடுகளை மேய்த்தவர்கள்தான். ஆடு, மாடுகளை அவமானப்படுத்துவது என்பது மேற்கண்ட கடவுளர்களை அவமானப்படுத்துவதற்கு சமம்.
ஆடுகளும் மாடுகளும் இல்லாத இயற்கை வேளாண்மை ஏது? பால் என்பது முழுமையான சத்துள்ள உணவு. பால் இருக்கும் நாடு பசியை சந்திக்காது. இதனைத் தெரியாமல் கல்வி கற்று என்ன பயன்? மனிதன் தனது தேவைக்கு தண்ணீரை பாட்டிலில் வாங்கி பருகிக் கொள்வான்.
ஆனால் ஆடு, மாடுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் எங்கே செல்லும்? ஆடு, மாடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலங்களை அவற்றிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில் ஆடு, மாடுகளுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வண்ணம் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.
இனி யாரையேனும் திட்ட வேண்டுமென்றால் எருமை என்று திட்டாதீர்கள். ஆட்சியாளர்களின் பெயர்களைச் சொல்லித் திட்டுங்கள். ஆடு, மாடுகளை வளர்ப்பது அவமானம் என்று கருதுகின்ற நீங்கள் ஏன், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் உண்ணுகிறீர்கள்? இதனை எதிர்த்து வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி தேனி மலைப் பகுதியில் ஆடு-மாடுகள் மேய்க்கும் போராட்டத்தை எத்தனை தடை விதித்தாலும் நடத்துவேன். இயற்கையை, உயிரினங்களை நேசிக்கும் அனைத்து மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்’ என்றார்.