ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (வயது 38).
இவர் தனது மனைவி சிந்தாமணி (வயது 32) மகள் அட்சயா (வயது 13) மகேஸ்வரி (வயது 10) ஸ்ரீ ஜெயவர்த்தன் (வயது 6) ஆகிய மூன்று குழந்தைகள் உடன் வசித்து வந்தார்.
மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லசாமியும், சந்திரனும் (வயது 35) என்பவரும் நண்பர்கள் ஆவர். குடும்ப தகராறு காரணமாக சொத்து பிரச்சனையில் தனது தாத்தா பாட்டி ஆகியோரை சந்திரனும் அவரது நண்பர் நல்லசாமியும் இணைந்து அவர்களை 2017 ஆம் ஆண்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சந்திரனும் நண்பர் நல்லசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தாத்தா பாட்டியை கொலை செய்த சந்திரன், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரன், தனது தாத்தா பாட்டியின் கொலைக்கு உதவிய நண்பர் நல்லசாமியின் மனைவி சிந்தாமணி உடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டு, கடந்த ஒரு வருடமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நல்லசாமி ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்து, பெரியகள்ளிபட்டிக்கு தனது குடும்பத்தினரை சந்திக்க வந்துள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் நல்லசாமியிடம் பேசுகையில், உன் நண்பரான சந்திரன் அடிக்கடி இங்கு வந்து செல்வதும், அவர்களுக்குள் திருமணம் மீறிய உறவு உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இரண்டு நாட்களாக மனைவி மீது சந்தேகம் அடைந்த நல்லசாமி, அவர்களுக்கு தெரியாமல், வேவு பார்த்துள்ளார். தனது குழந்தைகளிடமும் விசாரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு நல்லசாமியின் வீட்டுக்கு நண்பர் சந்திரன் வந்துள்ளார். நல்லசாமியும் சந்திரனும் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்குமிடையே லேசான வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்பு சந்திரன் நல்லசாமியின் வீட்டுக்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார். நல்லசாமி தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார்.
இன்று அதிகாலை திடீரென கண்விழித்த நல்லசாமி, காலை 3.30 மணி அளவில் வெளியே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு, வீட்டிற்குள் சென்று சந்திரனின் தலை மீது போட்டு, முகத்தை சிதைத்துள்ளார். சம்பவ இடத்திலேயே சந்திரன் துடிதுடித்து இறந்துள்ளார்.

தகவல் அளித்த பவானிசாகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்திரனை கொலை செய்த நல்லசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பனுக்காக கொலைக்கு உதவி, சிறைக்குச் சென்று, எட்டு வருடங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தவுடன், தனது நண்பனே தனக்கு துரோகம் இழைத்ததால், தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தால், நண்பனை கொலை செய்த சம்பவம் பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
