ARTICLE AD BOX
கர்நாடகா, ஹம்பி அருகே இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு: யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச புராதனச் சின்னங்கள் நிறைந்த ஹம்பி அருகே உள்ள துங்கபத்ரா இடதுகரை கால்வாய் அருகே, 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 5 பேர், நேற்றைய முன்தினம் இரவு நட்சத்திரங்களைப் பார்த்தவாறு பொழுதை கழித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதில் இரண்டு பெண்களில் ஒருவர், 27 வயதான இஸ்ரேல் நாட்டவர் என்றும், 29 வயதான மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் ஆவர். அதேபோல், மூன்று ஆண்களில் டேனியல் என்பவர் அமெரிக்காவையும், பங்கஜ் என்பவர் மகாராஷ்டிராவையும் மற்றும் பிபாஷ் என்பவர் ஒடிசாவையும் சார்ந்தவர்கள்.
இந்த நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இவர்களிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் எனக் கேட்டுள்ளனர். பின்னர், ரூ.100 கேட்டுள்ளனர். ஆனால், பணம் கொடுக்க அவர்கள் மறுத்ததால், சுற்றுலாப் பயணிகளில் 3 ஆண்களையும் கால்வாயில் தள்ளி உள்ளனர்.
மேலும், 2 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, கால்வாயில் தள்ளப்பட்ட 3 ஆண்களில் டேனியல் மற்றும் பங்கஜ் ஆகியோர் நீந்தி கரையேறி வந்துள்ளனர். ஆனால், பிபாஷ் நீரில் மூழ்கி உள்ளார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீசார், பிபாஷைத் தேடினர்.
இதையும் படிங்க: கானா இசைவாணிக்கு மிரட்டல்…பாஜக நிர்வாகிகள் அதிரடி கைது.!
இந்த நிலையில், இன்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சிறப்பு குழுக்கள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்த பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.