ARTICLE AD BOX
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது
பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல இயக்குனர்கள் இதனை கடைபிடிப்பது உண்டு. ஆனால் கவுண்டமணி-செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஆகியோர் இடம்பெறும் காமெடி காட்சிகள் பெரும்பாலும் ஸ்கிரிப்ட்டில் எழுதபட்டதை தாண்டியும் அந்த காட்சி படமாக்கப்படும்போது சில கூடுதல் சுவாரஸ்யங்களை சேர்த்துக்கொண்டே அந்த காட்சியை வளர்த்தெடுப்பதுதான் வழக்கம்.
நாம் பார்க்கும் பல காமெடி காட்சிகள் அவ்வாறு படப்பிடிப்புத் தளத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான். இதனை ஆங்கிலத்தில் “On the spot improvisation” என்று கூறுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வடிவேலு, தன்னை ஒரு பிரபல இயக்குனர் ஸ்கிரிப்ட்படி பேச சொல்லி ஆணையிட்டது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நல்லா இருக்கு ஆனால் வேண்டாம்!
“நகைச்சுவை என்பது கல்வெட்டு கிடையாது. ஒரு முறை ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடித்தேன். நான் காட்சியை சொல்ல சொல்ல சிரித்துக்கொண்டே இருந்தார். ‘நல்லா இருக்கு, ஆனால் பேப்பரில் டைப் செய்த வசனங்களை மட்டும் பேசுங்கள்’ என்று கூறினார். அப்படியா அப்போ டெவெலப் பண்ணக்கூடாதா? என்று கேட்டேன். இல்லை, வேண்டாம் என்ன எழுதியிருக்கிறதோ அதனை மட்டும் செய்யுங்கள் என்று கூறினார்.

அவர் பெரிய இயக்குனர். அவருக்கும் எனக்கும்தான் சமீபத்தில் சண்டை நடந்தது. அவரால்தான் இரண்டு மூன்று வருடங்கள் என்னால் நடிக்க முடியாமல் போனது. உங்களுக்கு தெரிந்திருக்கும், அவர் பெயர் சொல்ல நான் விரும்பவில்லை” என வடிவேலு தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார்.
வடிவேலு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் புகார் அளித்ததை தொடர்ந்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது கூடுதல் தகவல்.
