ARTICLE AD BOX
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
சென்னை: தனது சிம்பொனி இசையை அரங்கேற்றிவிட்டு லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் அழகாக அவருடைய குழுவினருடன் சிம்பொனியை வாசித்தார்.
எப்போதும் ஒரு இசையை வாசித்த உடன் எல்லாரும் அமைதியாக இருப்பார்கள். கை தட்டக்கூடாது என்பது விதி. ஆனால், அதையும் மறந்து மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இசை கோர்ப்பாளரே ஆச்சர்யமடையும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 80 பேர் என்னுடன் வாசித்தனர்.
சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடலையும் நான் பாடினேன். இதுவரை நான் அவர்கள் இசையில் பாடியது இல்லை. ஆனால், அவர்கள் அழகாக வாசித்தனர். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. தமிழக அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.

இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவன் அருள்புரிந்தார். என்னை இசைக் கடவுள் என அழைக்கின்றனர், என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம். நான் சாதாரண மனிதன்தான். எனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்யப் போகிறார் என நினைக்காதீர்கள். ஏனென்றால், இனிதான் ஆரம்பமே.
தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன். அக்டோபர் 6ம் தேதி துபாய், செப்டம்பர் 6ல் பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன. சிம்பொனி இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். பண்ணைபுரத்தில் இருந்து எனது வெறுங்கால்களில் எப்படி வந்தேனோ, அதேபோல்தான் இன்றும் இந்த இடத்தில் நிற்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!
முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த இளையராஜாவை, தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி வரவேற்று, அவர் இந்தியாவுக்கே பெருமை என பாராட்டினார். அதேபோல், பாஜக சார்பில் கரு நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு ஆகியோர் இளையராஜாவை வரவேற்று வாழ்த்திப் பேசினர்.
மேலும், 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்து அதற்கு வேலியண்ட் என பெயரிட்டிருந்தார் இளையராஜா. இந்த சிம்பொனியை உலகின் சிறந்த இசைக் குழுவினரான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினருடன், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு 45 நிமிடங்கள் லண்டனில் அரங்கேற்றினார்.
