ARTICLE AD BOX
இளையராஜா தொடுத்த வழக்கு?
வனிதா விஜயகுமார்-ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ஜோடியாக நடித்த திரைப்படம் “மிஸஸ் அண்டு மிஸ்டர்”. இத்திரைப்படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியுள்ளார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தின் சிவராத்திரி என்ற பாடல் பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் இளையராஜா இசையமைத்த பாடலாகும். அந்த வகையில் இப்பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் அப்பாடலை அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.

நான் மருமகளாக போயிருக்க வேண்டியவள்!

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்த பாடலை பயன்படுத்த இளையராஜாவிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். எனது மகளுடன் சென்று அவரது காலில் விழுந்தேன். அவர் சரி என்று சொன்னார். நேரில் சென்று கேட்கும்போதே திட்டி இருக்கலாமே, இப்போது வந்து வழக்கு மட்டும் போடுறீங்களே” என்று கூறிய அவர், கண்களில் கண்ணீருடன், “நான் சிறு வயதில் இருந்தே அவர் வீட்டில் வளர்ந்த பெண், அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போகவேண்டியவள்” என்று கூறினார். வனிதா விஜயகுமார் இவ்வாறு பேசியது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.