ARTICLE AD BOX
ஜெயம் ரவி டூ ரவி மோகன்
“ஜெயம்” படத்தின் மூலம் ஜெயம் ரவியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து என அறிவிக்கப்பட்ட பின் அவரிடம் இருந்து பிரிந்து வாழும் ரவி மோகன் சில நாட்களாக கெனீஷா என்ற பாடகியுடன் ஜோடியாக வலம் வருகிறார்.
தற்போது “ஜீனி”, “பராசக்தி”, “கராத்தே பாபு” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் “3BHK” என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரவி மோகன், உணர்ச்சிவசத்தில் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
வாடகை வீட்டுலதான் இருக்கேன்
“3BHK” திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “எட்டுத் தோட்டாக்கள்”, “குருதியாட்டம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் சொந்தமாக ஒரு வீடு கட்ட என்னென்ன பாடுபடுகிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் இது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரவி மோகன், “நான் என்னுடைய வாழ்க்கையில் வாடகை வீட்டில் இருந்ததே இல்லை. எப்போதுமே சொந்த வீடுதான். ஆனால் இப்போது நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆதலால் இத்திரைப்படத்துடன் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. எனக்கு இத்திரைப்படம் உதவேகத்தை அளித்தது” என கூறினார். இவர் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“3BHK” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.