ARTICLE AD BOX
திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை வேறொருவரிடம் ஒப்படைத்து தப்பிக்க முயன்ற காதல் தம்பதியை போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து புளியந்தோப்பு போலீசாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தை வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழந்தையை சாய்ரா பானு என்ற பெண் கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்றும், ஆனால் அவரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகிறது என்ற சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, புளியந்தோப்பு போலீசார் மருத்துவமனைக்குச் சென்று, புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியைச் சேர்ந்த சாய்ரா பானு (36) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குழந்தை சாய்ரா பானுவின் குழந்தை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்ரா பானு, தனது தங்கை முபாரக் நிஷா கருவுற்று இருந்ததால், அவரை புளியந்தோப்பு திருவேங்கடம் தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குமரன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவர் கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு, சாய்ரா பானுவுக்கு பழக்கமாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொண்டு சிகிச்சைக்குச் செல்லும் போதெல்லாம் பேசி வந்துள்ளனர். அதன் பிறகு, சாய்ரா பானு தங்கை முபாரக் நிசாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார்.
பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் சாய்ரா பானுவை தொடர்பு கொண்ட குமரன், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், எனது மனைவி பிரியங்கா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து சென்று விட்டார் என்றும், எனவே அவரைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து, குழந்தையை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி, இதற்கு சம்மதித்த சாய்ரா பானு, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் குழந்தையை தனது வீட்டில் வைத்து பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு குமரனை தொடர்பு கொண்ட சாய்ரா பானு, குழந்தையை எப்போது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உரிய பதிலளிக்காத நிலையில், சில நாட்கள் கழித்து குமரன் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார் என சாய்ரா பானு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குமரன் மற்றும் பிரியங்கா யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
இதன்படி, குமரன் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பிரியங்கா ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர், நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு முன்பே பிரியங்கா கருவுற்றதால் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் தனியாக செங்குன்றம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, குழந்தையைப் பெற்றதாகவும், தற்போது குழந்தை பிறந்த விவரம் இரண்டு குடும்பத்திற்கும் தெரியாது எனவும், அதனால் சாய்ரா பானுவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, குமரனின் தந்தை முனுசாமி, இருவரையும் குழந்தையுடன் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறியதன் அடிப்படையில், போலீசார் குழந்தையை குமரன் மற்றும் பிரியங்காவிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

7 months ago
78









English (US) ·