ARTICLE AD BOX
கோவையில் தி.மு.கவினர் வைத்த பிளக்ஸ் பேனர் அருகே அ.தி.மு.க பிளக்ஸ் பேனர் வைத்த சம்பவத்தில் சீருடை அணிந்த காவல் துறை உதவி ஆய்வாளரை கடுமையான வார்த்தைகளால் பொது இடத்தில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க மாவட்ட துணை செயலாளர் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க வினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது.
அதில் கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் வைக்கப்பட்டு இருந்த கட் அவுட் அருகே அ.தி.மு.க வினரின் பேனர் வைக்கப்பட்டு இருந்ததால் அ.தி.மு.க வினரின் பேனரை அங்கு இருந்து தி.மு.க வினர் அப்புறப்படுத்தியதால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே அங்கு சமாதான பேச்சு வார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட்ட நிலையில் திடீரென அங்கு வந்த தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் சீருடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் கடும் கோபத்துடன் தி.மு.க வினர் என்ன பைத்தியக்காரனா, நீ என்ன ரவுடியா ? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன் என்று காவல் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன் அவருக்கு கடுமையான வார்த்தைகளால் நேரடி மிரட்டல் விடுத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து தி.மு.க வினர் அப்பகுதியில் சிறிது நேரம் மறியலிலும் ஈடுபட்டனர். தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.