ARTICLE AD BOX
முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியை நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த 170க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நமது மாநில எல்லைகளுக்கு அப்பால் நமது தமிழ் மொழியைப் பரப்புவதற்கு நீங்கள் (மு.க.ஸ்டாலின்) என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடுவதற்குப் பதிலாக, அப்படி எதுவும் இல்லை என்பதை அறிந்து, அடுத்த தலைப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளீர்கள்.
அது எங்களது கூற்று அல்ல; அது ஒரு உண்மை, இன்று நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்புவதில் நமது பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக நிற்கிறது.
தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு நயவஞ்சகர் மட்டுமே கேட்பார், அதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவை நன்கு அறிவார். 2006-2014க்கு இடையில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு இது என்பதால் நாங்கள் உங்களை “நயவஞ்சகர்” என்று அழைக்கிறோம்.

சமஸ்கிருதம் – ரூ.675.36 கோடி, தமிழ் – ரூ.75.05 கோடி, அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியை நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த 170க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
உங்கள் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு திருவள்ளுவரை வேண்டுமென்றே அவமதித்துள்ளீர்கள். உங்கள் செயலிழந்த பிரச்சாரத்திற்காக வேறு இடங்களில் சியர்லீடர்களைத் தேடுங்கள். உங்கள் வெறுப்பு, நமது மகாராணி வேலு நாச்சியாரின் பெயரிடப்பட்ட ஒரு ரயில் எஞ்சினைப் பார்க்க முடியாதபடி உங்களைக் குருடாக்கிவிட்டது.
அப்போது வந்தே மாதரத்தில் உங்களுக்குப் பிரச்னை இருந்தது, இன்று வந்தே பாரதத்திலும் உங்களுக்குப் பிரச்சினை உள்ளது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது.
1965ஆம் ஆண்டு மாநிலங்களவையில் உரையாற்றிய அண்ணா, “இந்தி ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறதேயன்றி, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை. ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதும் ஆட்சி மொழியாவதற்கான தகுதியைப் பெற்றுவிடாது.
மொழிப் பிரச்னையில் திமுகவின் கொள்கை என்னவென்றால், இந்தியாவில் முக்கிய மொழிகளாக உள்ள 14 மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆட்சிமொழிகளாகும் தகுதி தரப்படவேண்டும்” என்று வாதாடினார்.
திமுகவின் நோக்கம் இந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்குச் சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக அலுவல் மொழிகளாக அனைத்து மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்கள்.
தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பாஜக ஆட்சியில், சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே.
இதையும் படிங்க: கல்பனாவுக்கு மன அழுத்தம்.. கேரளாவில் இருந்து பதற்றத்தில் வந்த மகள் பரபரப்பு பேட்டி!!
ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது.
தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலகச் சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
