ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க முடியாது
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து அவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கும்போதே உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என கூறியிருந்தார்.
கமல்ஹாசன் இவ்வாறு பேசியது கர்நாடக மாநிலத்தில் பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பல கன்னட அமைப்புகள், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம்” என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று கண்டனமும் தெரிவித்தார்.
ஆனால் கமல்ஹாசனோ, “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று திடமாக கூறிவிட்டார்.
படத்தை தடை செய்யுங்கள்
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள நிலையில் கர்நாடக மாநில கன்னட மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்காடகி, “கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது திரைப்படங்களை உடனடியாக தடை செய்யவேண்டும்” என கர்நாடகா பிலிம் சேம்பரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர், “கமல்ஹாசன் பேசிய கருத்து பல கன்னடர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. கர்நாடக மொழி, கர்நாடக மண், கர்நாடக நீர் என்று வரும்போது யார் பேசினாலும் இது போன்ற கருத்துக்களை நாங்கள் பொறுத்துக்கொள்ளமுடியாது. கமல்ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில்தான் கமலின் பேச்சால் கர்நாடகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.

5 months ago
54









English (US) ·