ARTICLE AD BOX
நெல்லை மாவட்டத்தில் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
சாதி ஜாதி ஆணவத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ நடத்தி வரும் கோபி-சுதாகர், கவின் படுகொலை குறித்து வெளியிட்ட கிண்டல் வீடியோ ஒரு பக்கம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தாலும், மறுபக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ, நெல்லையில் இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதலை, இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர், கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
புகாரில், “பரிதாபங்கள் சேனல், குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளது. இது சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும், மேலும் இதுபோன்ற உள்ளடக்கங்கள் வெளியிடப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
