ARTICLE AD BOX
சமூக ஊடகம் மூலம் ஏற்படும் காதல் எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முகேஷ் குமாரி (37), கணவரை விவாகரத்து செய்த பின் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில், பர்மா நகரத்தைச் சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவருடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு சில மாதங்களில் காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி, சந்தித்து வந்தனர். முகேஷ் குமாரி திருமணத்தை விரும்பிய நிலையில், மனாராம் தொடர்ந்து அதைத் தவிர்த்துவந்தார். கடந்த ஒரு வருடமாக இந்த விவகாரம் நீடித்ததால், முகேஷ் குமாரி நேரடியாக தனது காரில் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காதலனின் வீட்டைச் சென்றடைந்தார்.

அங்கு அவரது குடும்பத்தினரிடம் தங்களுக்கிடையிலான உறவை வெளிப்படையாகச் சொன்னார். இதனால் அதிருப்தியடைந்த மனாராம், முகேஷை காரில் புறநகர் பகுதியில் அழைத்து சென்று, இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிக் கொலை செய்தார்.
பின்னர், உடலை அருகிலிருந்த முள்புதரில் வீசி விட்டு தப்பிச் சென்றார். உடல் கிடந்த இடத்தை கண்டுபிடித்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விரைவில் அடையாளம் காணப்பட்ட மனாராம், போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
