ARTICLE AD BOX
அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பள்ளி திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது, இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காலை வேளையில் வகுப்புகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலுள்ள கிராமவாசிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கான்கிரீட் கற்களை அகற்றி, மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், ஜலாவர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அமித் குமார் புடானியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
தற்போது, மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மற்ற மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து, பள்ளி கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாழடைந்த நிலையில் இருந்த இந்த கட்டிடம், முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
படுகாயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டிடங்களின் தரம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவம்பர் 25, 2025
