ARTICLE AD BOX
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம்m என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (17). இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், வார விடுமுறை முடிந்து வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காக, இன்று பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அரியநாயகிபுரத்திற்கு அடுத்த கெட்டியம்மாள்புரம் அருகே பேருந்து சென்றபோது ,அந்தப் பேருந்தை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. இதனையடுத்து பேருந்து நின்றதும், பேருந்துக்குள் ஏறிய அந்தக் கும்பல், தேவேந்திரன் எங்கு இருக்கிறார் எனத் தேடியுள்ளது.
பின்னர், தேவேந்திரனை மட்டும் இழுத்து பேருந்துக்கு வெளியே கொண்டு வந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து மாணவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறி உள்ளானர்.
இதனால், அச்சத்தில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக பயணிகளில் ஒருவர் அளித்த தகவலின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாபபிள்ளை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் வெட்டுக் காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!
இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பேருந்துக்குள் நுழைந்து மாணவரை வெளியே இழுத்து வந்து வெறிச்செயலில் ஈடுபட்ட மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், மாணவரின் உடல் நிலை குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறுகையில், “பள்ளி மாணவருக்கு தலையில் 6 இடத்தில் வெட்டுக் காயம் மற்றும் கை விரல்கள் துண்டாகியுள்ளது. முதுகுப் பகுதியிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.