ARTICLE AD BOX
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்த “பீனிக்ஸ்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் படுமோசமான வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரோலில் சிக்கிய சூர்யா சேதுபதி
சூர்யா சேதுபதி தனது தந்தையான விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் “பீனிக்ஸ்”. இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதில் சூர்யா சேதுபதியுடன் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளிவந்தது.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சூர்யா சேதுபதி ஒரு பேட்டியில் “நான் வேறு எனது தந்தை வேறு” என பேசிய விஷயங்களும் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் வாயில் பபுள்கம் மென்றபடி ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்த நிகழ்வும் ரசிகர்களின் மத்தியில் ட்ரோலுக்குள்ளானது. இவ்வாறு படம் வெளியாகும் முன்பே, “ஓஹோ, இவர் இப்போவே இவ்வளவு திமிரு காட்டுகிறாரா?” என்பது போன்ற விமர்சனங்கள் வலம் வரத்தொடங்கிவிட்டன.
சுமாரான வரவேற்பு
இவ்வாறு நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையில் “பீனிக்ஸ்” திரைப்படமும் வெளியாக ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ரசிக்கும்படியாக அமையவில்லை. அந்த வகையில் இது பாக்ஸ் ஆஃபிஸிலும் எதிரொலித்தது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில், ரூ.9 லட்சம் வசூலானதாக கூறப்பட்ட நிலையில் வார இறுதி நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே வசூலானது.
அதன் படி சனிக்கிழமை ரூ.21 லட்சமும் ஞாயிற்றுக்கிழமை ரூ.25 லட்சமும் வசூலானது. ஆனால் திங்கட்கிழமையான நேற்று இத்திரைப்படம் அப்படியே மல்லாக்கப் படுத்துவிட்டது. அதாவது நேற்று இத்திரைப்படம் வெறும் ரூ.7 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நான்காவது நாளிலேயே ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு மூடு விழா நடத்தியுள்ளனர்.