ARTICLE AD BOX
பெண் என்பதால் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கின்றனரா என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர்: 2021ஆம் ஆண்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 31 வார்டுகள் திமுக, 5 திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. மேலும், 2022இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவுடன் சுந்தரி ராஜா என்பவர் மேயர் ஆனார்.
ஆனால், இவரை எதிர்த்து கடலூர் திமுக எம்எல்ஏ கோ.ஐயப்பனின் ஆதரவாளரான கீதா குணசேகரன் போட்டியிட்டு தோற்றார். இருப்பினும், திமுக கோஷ்டி பூசல் அடங்கவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில், மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி கடந்த மாரச் 10ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கடுப்பான மேயர் சுந்தரி ராஜா, “மாநகராட்சித் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அதிகாரிகள் சொன்னதால்தான் நான் வந்தேன்.
என்னை வரச்சொல்லிவிட்டு அதிகாரிகள் யாரும் வரவில்லையா?” என அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் சூடாக கேள்வி எழுப்பினார். பின்னர், எல்லாம் முடிந்த பிறகு மாநகராட்சி உதவிப் பொறியாளர் பாரதி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அப்போது, அவர்களைப் பார்த்து, “மாநகராட்சி சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை தெரிவிக்கிறீர்கள். நீங்கள் சொன்ன நேரத்துக்கு நான் இடத்துக்கு வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. பெண் மேயர் என்பதால் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் போராட வேண்டும்.. ஒன்னும் இல்லாம போயிடும்.. சீமான் கடும் தாக்கு!
இந்த நிலையில், இது குறித்து மேயர் சுந்தரி ராஜா பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் எந்த நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்களோ, அந்த நேரத்துக்கு நான் தவறாமல் சென்று விடுகிறேன். ஆனால், அதிகாரிகள் அந்த நேரத்துக்கு வருவதில்லை, தாமதமாகவே வருகிறார்கள்.
இதுவரை 5 நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் இப்படி நடந்துள்ளனர். மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

7 months ago
63









English (US) ·