ARTICLE AD BOX
இந்திய இயக்குனர்
“ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஷாருக்கானின் கெரியரில் அதிகளவு வசூலான திரைப்படமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குனராக ஆனார் அட்லீ.
 தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு மிகப் பெரிய பட்ஜெட்டில் ஒரு ஃபேண்டசி திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அட்லீ.
கௌரவ டாக்டர் பட்டம்
இந்த நிலையில் இன்று சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சத்யபாமாவின் முன்னாள் மாணவர் என்ற முறையில் அக்கல்லூரியில் தனது அனுபவத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அட்லீ.
கௌரவ டாக்டர் பட்டம் வாங்கிய பெருமிதத்தோடு மேடையில் அட்லீ மேடையில் பேசத்தொடங்கினார். “கடவுள் புண்ணியத்தில் எத்தனையோ மேடைகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த மேடையிலும் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டது கிடையாது” என பேசிய அட்லீ, “நான் இதுவரை கல்லூரியில் உண்மையை பேசவேண்டும் என நினைத்ததே இல்லை. ஆனால் இன்று உண்மையை மட்டும்தான் பேச வேண்டும் என்ற சூழல். கொஞ்ச காலமாகவே பொய் சொன்னாலே இருமல் வர ஆரம்பிக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை.
 ஆதலால் முடிந்தவரை நான் உண்மையை சொல்கிறேன். பொய் சொன்னால் நான் இருமி விடுவேன்” என்றார்.
அதன் பின் பேசத் தொடங்கிய அட்லீ, “நான் இந்த கல்லூரியில் பயங்கரமான ஸ்டூடண்ட்” என்று சொல்லிவிட்டு இருமினார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தனர். மீண்டும் பேசத்தொடங்கிய அட்லீ, “என்னைப் பார்த்தால் நல்லா படிக்கிற பையன் போலத் தோன்றும்” என்று கூறிவிட்டு மீண்டும் இருமினார். இவ்வாறு நகைச்சுவையாக பேசிய அட்லீ, அதனை தொடர்ந்து பேசுகையில், “ஊருக்கு நாம் என்னவாக இருந்தாலும் வீட்டில் அரசன் என்றுதான் சொல்வார்கள். அப்படித்தான் இந்த கல்லூரியும். என்னை ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசனாக பார்த்தது. ஆரம்பத்தில் இருந்தே என்னை வெற்றியாளனாக பார்த்தது. சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு நன்றி” என தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். சினிமாத்துறையில் சாதனை செய்ததற்காக அட்லீக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                44
                    








                        English (US)  ·