ARTICLE AD BOX
ஊடகவியலாளர்களை தகாத வார்த்தையால் திட்டி, தாக்க சொன்ன வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: சித்திக்கு பல நாள் ஸ்கெட்ச் போட்ட மகன்.. அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும்படியும் , திரு வைகோ அவர்கள் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஒரு மூத்த அரசியல் தலைவரான திரு வைகோ அவர்கள், சிறிதும் பொறுப்பற்ற முறையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திரு வைகோ அவர்கள், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நிச்சயம் நேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக கட்சியினர் மீது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.