ARTICLE AD BOX
கடந்த மே மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதனை தொடர்ந்து தன்னை கொலை செய்ய சதி வேலை நடப்பதாகவும் இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் எனவும் அவர் கூறியது அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் அவர் தன்னை இடித்த அந்த காருக்குள் வெள்ளை தொப்பி மற்றும் தாடியுடன் கூடிய இரண்டு நபர்கள் இருந்ததாகவும் கூறியது சர்ச்சையை கிளப்பியது. எனினும் மதுரை ஆதீனத்தின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மதுரை ஆதீனம் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை தொடர்ந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வேண்டும் என மதுரை ஆதீனம் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேல் ஆகியுள்ளதால் அவர் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை, அவரது இடத்திற்கே சென்று காவல்துறை விசாரணை நடத்தலாம், ஆனால் காவல்துறை விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என நிபந்தனை விதித்து முன் ஜாமின் வழங்கியது.
இதனை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் அதிகாரிகள் மதுரைக்குச் சென்று அவரை விசாரணை நடத்தினர். அப்போது மதுரை ஆதீனத்திற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்த காரணத்தினால் அவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு படுக்கையில் இருந்தபடியே பதிலளித்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனம் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தரவில்லை என கூறி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இது குறித்த தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். “மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்ய கோரி தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்திவிட்டு தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என திமுக அரசின் காவல்துறை கூறுவது உள்நோக்கம் கொண்டது.

தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தியவனை கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. ஆனால் உப்பு சப்பில்லாத காரணத்தை கூறி மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திபடுத்த திமுக அரசு நாடகமாடிக்கொண்டிருக்கிறது” என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
