ARTICLE AD BOX
தனுஷ்-நயன்தாரா மோதல்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண வீடியோவான நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற ஆவணப்படம் கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் நெட்பிலிக்ஸுடன் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த ஆவணப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது அதில் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட அதன் பின் தனுஷ் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட இணையம் சூடுபிடித்தது. இவ்வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது வழக்கு
இதனிடையே நயன்தாராவின் ஆவண படத்தில் “சந்திரமுகி” திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி அத்திரைப்படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத்தை தயாரித்த டார்க் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு அக்டோபர் 6 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
