ARTICLE AD BOX
சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு?
கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற “கூலி” திரைப்படத்தின் Pre Release Event-ல் ரஜினிகாந்த் சத்யராஜ் குறித்து பேசியபோது, “எனக்கும் சத்யராஜுக்கும் இடையே கருத்து ரீதியான முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசுல பட்டதை சொல்லிடுவார். மனசுல பட்டதை சொல்றவங்களை நம்பலாம். ஆனால் மனசுக்குள்ளேயே வச்சிட்டு இருக்குறவங்களை நம்ப முடியாது” என பேசியிருந்தார்.
ரஜினிகாந்தும் சத்யராஜும் இணைந்து 1980களில் “மிஸ்டர் பாரத்”, “நான் சிகப்பு மனிதன்”, “மூன்று முகம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் “கூலி” திரைப்படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்காததற்கு முக்கிய காரணம் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுதான் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுவது உண்டு.
 இந்த நிலையில்தான் “கூலி” திரைப்படத்தின் விழாவில், “எனக்கும் சத்யராஜுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன” என பேசியுள்ளார். ரஜினிகாந்த் இவ்வாறு கூறியது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யராஜ் கர்நாடகா பிரச்சனையில் ரஜினிகாந்தை ஒரே மேடையில் தாக்கிப் பேசிய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ரஜினியை சாடிய சத்யராஜ்!
பல வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் பலர் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் தமிழகத்தில் தமிழ் திரை நடிகர்கள் பலர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சத்யராஜ், “பொதுவாக சில மேடைகளில் சில பேரின் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். யாருடைய பெயரை சொன்னால் நீங்கள் எல்லாரும் கைத்தட்டுவீர்களோ அவர்கள் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அப்படி அவர்கள் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்கு பதிலாக நான் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம்.
கர்நாடகாவில் தமிழனை அடிக்கிறார்கள், அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறோம், ஒரு நடிகனின் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்காக நான் வரவில்லை” என ரஜினிகாந்தை ஒரே மேடையில் நேரடியாகவே தாக்கிப்பேசினார்.
மேலும் அந்த கூட்டத்தில் பேசிய சத்யராஜ், “கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் என்று ஒருவர் இருக்கிறான். அவன் மிகப்பெரிய காமெடியன். நம்ம வடிவேலு எல்லாம் அவர் முன் தோற்றுப்போய்விடுவார். அந்த வாட்டாள் நாகராஜ் சொல்கிறான், ஈரோடு, கிருஷ்ணகிரி, சென்னை போன்ற பகுதிகள் கர்நாடகாவில் சேரவேண்டும் என்று சொல்கிறான். அப்படி என்றால் நாம் என்ன விரல் சூப்பிக்கொள்வதா? வாட்டாள் நாகராஜ் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் என்று நமக்கு சம்பந்தப்பட்ட ஒருத்தரே ஒரு காலகட்டத்தில் பேசியிருக்கிறார். நாம் கர்நாடகாவிற்கு சென்று எனக்கு பிடித்த பேச்சாளர் பேரறிஞர் அண்ணா என்று சொல்லமுடியுமா?” என ரஜினிகாந்தை நேரடியாகவே தாக்கிப் பேசியிருந்தார் சத்யராஜ். அந்த சமயத்தில் சத்யராஜ் ரஜினிகாந்த் குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
 
                        3 months ago
                                36
                    








                        English (US)  ·