ARTICLE AD BOX
ரஜினியின் பக்தர்கள்
தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அதாவது இவரது ரசிகர்களை ரசிகர்கள் என்று கூறவே முடியாது. ரஜினிகாந்தின் பக்தர்கள் என்றுதான் கூறமுடியும். அந்தளவிற்கு ரஜினிகாந்தின் மீது தீவிர பக்தியோடு இருப்பார்கள்.
“அருணாச்சலம்” திரைப்படத்தில் வடிவுக்கரசி ரஜினியை திட்டுவது போன்ற ஒரு காட்சியில் நடித்ததற்காக வடிவுக்கரசி சென்ற ரயிலை மறித்து “எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று மிரட்டியவர்கள்தான் ரஜினியின் ரசிகர்கள். ஆதலால் திரைப்படங்களில் ரஜினியை திட்டுவது போன்ற காட்சிகள் இருந்தாலோ அல்லது அவரை அடிப்பது போன்ற காட்சிகள் இருந்தாலோ பல நடிகர்கள் அதில் நடிக்க பயப்படுவார்கள்.
நான் அடிக்கிறேன் சார்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் நாசர், ரஜினிகாந்தை ஒரு காட்சியில் அடிப்பது போல் நடித்தது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“சந்திரமுகி” திரைப்படத்தில் தன்னுடைய மனைவி ஜோதிகா மீது சந்தேகப்பட்ட காரணத்திற்காக ரஜினிகாந்தை அவரது நண்பரான பிரபு வீட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். முதலில் பிரபு ரஜினிகாந்தை அடித்து வெளியே துரத்துவது போன்று இந்த காட்சியை எழுதியிருந்தாராம் இயக்குனர் பி.வாசு.
ஆனால் பிரபுவோ, “அய்யோ நான் ரஜினி சாரை அடித்தால் நாளை என்னால் என் வீட்டை விட்டே வெளியே போகமுடியாது” என்று பயந்தாராம். விஜயகுமாரிடம் கேட்டபோது அவரும் முடியாது என்று கூறிவிட்டாராம். அதன் பின் பி.வாசு நாசர் பக்கம் திரும்பியபோது, நாசர், “சார் நான் அடிக்கிறேன் சார்” என்று கையைத்தூக்கிக்கொண்டு முன்னால் வந்தாராம். அதன் பிறகு நாசர் ரஜினியை வீட்டை விட்டு அடித்து வெளியே துரத்துவது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இத்தகவலை அப்பேட்டியில் நாசர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இத்திரைப்படம் வெளிவந்தபோது இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் நாசரை திட்டித் தீர்த்தனர். மதுரையில் ஒரு திரையரங்கில் இந்த காட்சி இடம்பெற்றபோது ஒரு ரசிகர் திரையையே கிழித்துவிட்ட சம்பவம் கூட நடந்தது.

5 months ago
46









English (US) ·