ARTICLE AD BOX
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் பாமகவை சேர்ந்த அன்புமணி தரப்பின் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள செழியன் என்பவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.
அந்த பெட்ரோல் பங்கிற்கு இன்று காலை டீசல் போடுவதற்காக வந்த ராமதாஸ் அணி பாமகவை சேர்ந்த ரிஷிவந்தியம் திருக்கோவிலூர் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார்.
பெட்ரோல் போட்ட பின்னர் ராஜ்குமார் தரப்பில் பணம் வழங்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல் பங்க் ஊழியரான மாறன் என்பவர் பணம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் உடன் காரில் வந்தவர்களுக்கும் பங்க் ஊழியிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த அன்புமணி தரப்பைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் செழியன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமாரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. பாமகவை சேர்ந்த இரண்டு அணியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் உத்தரவின் பெயரில் திருக்கோவிலூர் ஆய்வாளர் மற்றும் போலீசார் பெட்ரோல் பங்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புமணி தரப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் இதுவரை புகார் அளிக்காததால் இருவருக்கும் இடையே கலவரம் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் போலீசார் தற்போது பெட்ரோல் பங்கில் அதிகப்படியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அன்புமணி தரப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அதிக அளவில் மக்களை திரட்டியதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாமகவில் நிலவிவரும் தந்தை மகன் பிரச்சனையில் ஒரே கட்சியில் இருந்த தற்போது இரண்டு அணியாக பிரிந்துள்ள மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
