ARTICLE AD BOX
மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி
வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் “மாமன்னன்” திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து இதே வெற்றிக் கூட்டணியில் அமைந்துள்ள திரைப்படம்தான் “மாரீசன்”.
வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “மாரீசன்” திரைப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். ஆர் பி சௌத்ரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கலைச்செல்வன் சிவாஜி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பிளஸ் மைனஸ் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை
திருடனாக இருக்கும் ஃபகத் ஃபாசில், வழக்கம் போல் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கப் போகிறார். அப்போது அந்த வீட்டில் வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார். திருட வந்த ஃபகத் ஃபாசில் வடிவேலுவை சங்கிலியில் இருந்து மீட்கிறார்.
திருவண்ணாமலையில் நண்பர் ஒருவர் இருக்கிறார், அவரை பார்க்க அழைத்துச் சென்றால் பணம் தருவதாக வடிவேலு ஃபகத் ஃபாசிலிடம் கூறுகிறார். மேலும் வடிவேலுவின் வங்கி கணக்கில் பல லட்சம் பணம் இருப்பதையும் அவர் ஏடிஎம்மில் இருக்கும்போது ஃபகத் ஃபாசில் பார்த்துவிடுகிறார். இந்த பணத்தை எப்படியாவது வடிவேலுவிடம் இருந்து திருடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவேலுவுடன் திருவண்ணாமலைக்கு பயணிக்கிறார் ஃபகத் ஃபாசில்.
அதன் பின் வடிவேலு ஃபகத் ஃபாசிலின் அடையாளங்களை பயன்படுத்தி கொலை செய்கிறார். அந்த கொலைக்கான பின்னணி என்ன? ஃபகத் ஃபாசில் பணத்தை திருடினாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை.
படத்தின் பிளஸ்
ஃபகத் ஃபாசில், வடிவேலு ஆகிய இருவரின் நடிப்புத் திறமையை பற்றி நாம் தனியாக கூறத் தேவையில்லை. ஒவ்வொரு காட்சியிலும் இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உள்வாங்கி போட்டி போட்டு நடித்துள்ளனர். மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவின் நடிப்பு மிரள வைக்கிறது. மேலும் ஃபகத் ஃபாசில் ஒரு நிஜ திருடனை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். படத்தின் முதல் பாதி எதிர்பார்க்காத அளவிற்கு சுவாரஸ்யமாக செல்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். வடிவேலு, ஃபகத் ஃபாசில் மட்டுமல்லாது துணை கதாபாத்திரங்களில் நடித்த கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்க்ஸ்டன் என பலரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் மைன்ஸ்
ஆனால் படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைந்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக படம் முழுவதும் ஃபகத் ஃபாசில் வடிவேலு ஆகிய இருவரின் கதாபாத்திரம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்புத் தட்டி விடுகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதையும் சற்று சறுக்கியுள்ளது.
கிளைமேக்ஸ் டிவிஸ்ட் சரியாக அமைந்துவிட்டது என்றாலும் அதற்கு முந்தைய காட்சிகளில் தொய்வு இருப்பதால் சற்று ‘உச்’ கொட்ட வைக்கிறது. இந்த மைனஸ்களை மட்டும் பொறுத்துக்கொண்டால் ஒரு நல்ல திரில்லர் படத்திற்கான உணர்வை “மாரீசன்” கொடுக்கிறது. இந்த வருடத்தின் குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக “மாரீசன்” அமையும் என்பது உறுதி.
