ARTICLE AD BOX
சின்ன பட்ஜெட் பெரிய வெற்றி
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான “லப்பர் பந்து” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் அசத்தலான நடிப்பும் இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்ட விதமும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க திரைப்படமாக உருகொள்ளவைத்தது..
கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண் மட்டுமல்லாது ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி என பலரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இத்திரைப்படம் ரூ.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் ரூ.40 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.

பாலிவுட்டிற்குச் செல்லும் தமிழ் படங்கள்
சமீப காலமாக பல தமிழ் திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகின்றன. கடந்த வருடம் “தெறி” படத்தின் ஹிந்தி ரீமேக்கான “பேபி ஜான்” திரைப்படம் வெளிவந்தது. ஆனால் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தை “தடக் 2” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இது தமிழ் சினிமா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பலரும், “இப்படி நல்ல தமிழ் படத்தை எல்லாம் ரீமேக் பண்ணி கெடுத்து வச்சிடுறாங்க” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “லப்பர் பந்து” நடிகை ஸ்வாசிகா, ஷாருக்கான் “லப்பர் பந்து” திரைப்படத்தை பார்த்து ரசித்ததாகவும் இத்திரைப்படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாகவும் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிலையில் “லப்பர் பந்து” திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதில் கெத்து தினேஷ் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இத்தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் , “இந்த படத்தையும் சோலியை முடிக்கப்போறீங்களா?” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
