வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

5 days ago 9
ARTICLE AD BOX

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்: கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் உள்ள முரட்டு வாய்க்கால் பகுதியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மருதூர் போலீசார், வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, இறந்து கிடந்தவரின் இரண்டு கால்களிலும் வெட்டப்பட்டது போன்ற காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கினர். இந்த விசாரணையில், இறந்து கிடந்தவர் பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பதும், அவர் தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், உயிரிழந்த பாபு கடைசியாக தனது மூன்று நண்பர்களான செல்வ கணபதி, செல்வகாந்தி மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும், ஒன்றும் தெரியாதது போல் கிராம மக்களுடன் நின்று கொண்டிருந்த செல்வகாந்தி, செல்வகணபதி மற்றும் பிரவீன் ஆகிய மூவரைப் பிடித்து புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Cuddalore Theft

இரவு முழுவதும் நடைபெற்ற கிடுக்குப்பிடி விசாரணையில், சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வகாந்தி, செல்வகணபதி மற்றும் பிரவீன் ஆகிய மூவரும் மஞ்சக்கொல்லை முரட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரின் வீட்டில் திருடியுள்ளனர்.

அந்த வீட்டின் பூட்டை உடைத்து குத்துவிளக்கு, அன்னக்கூடை ஆகிய பொருட்களைத் திருடி விற்று மது அருந்தியுள்ளனர். பின்னர், மறுநாள் மீண்டும் தனது நண்பர் பாபுவை அழைத்துக்கொண்டு அதே வீட்டிற்கு மூவரும் திருடச் சென்றுள்ளனர். அப்போது, செல்வராஜ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பாபு உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் அங்கிருந்து ஓடி எப்போதும்போல் ஊருக்குள் இருந்துள்ளனர். இதன் பேரில், அந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தனது வீட்டில் தொடர் திருட்டுச் சம்பவம் நடைபெற்று வந்ததால், வீட்டைச் சுற்றி மின்வேலி அமைத்தேன் என செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அப்டின்னா இவுங்க யாரு? சலசலப்பான ஆனந்த் பேச்சு.. தவெகவுக்கு பின்னடைவா?

இதன்படி, மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாகவும், எனவே அவரின் உடலை அருகே இருந்த முரட்டு வாய்க்கால் பகுதியில் தூக்கி வீசிவிட்டேன் என்றும் செல்வராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இளைஞர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக, வீட்டின் உரிமையாளர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

மேலும், செல்வராஜ் வீட்டில் திருடியது தொடர்பாக செல்வகாந்தி, செல்வகணபதி மற்றும் பிரவீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிச் சென்ற குத்துவிளக்கு, அன்னக்கூடை ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

  • Ilayaraja கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
  • Continue Reading

    Read Entire Article