ARTICLE AD BOX
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய்
தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க முழு நேர அரசியல்வாதியாக விரைவில் தயாராக உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

விஜய் ஒரு காமெடியன்…
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பேற்றிருப்பதை ஒட்டி கல்லூரி மாணவர்கள் பலரும் முதல்வரை சந்திக்கும் விழா நடைபெற்றது. அப்போது ஊடகத்திற்கு பேசிய மாணவி ஒருவர், “திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது 18 மணி நேரம் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது எங்கள் அன்பு அண்ணன் உதயநிதி ஸ்டாலின்தான் 18 மணி நேரம் நின்றார். அந்த மீட்பு பணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நடிகர் தனி விமானத்தில் ஒரு நடிகையின் திருமணத்திற்கு போய்விட்டார்.

நடிகருக்கு நடிகை முக்கியம், ஆதலால் அங்கு போய்விட்டார். தலைவனுக்கு தமிழ்நாட்டு மக்கள் முக்கியம். அதனால் மீட்பு பணியில் எங்கள் அண்ணன்தான் நின்றார். இளைஞர்கள் யாரையும் சும்மா எடை போட்டு விடாதீர்கள் இளைஞர்களே. எங்கள் இளைஞர்கள் நன்றியுள்ள இளைஞர்கள். அவர்கள் 2026 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்திற்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று பேசினார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக பேசிய ஒரு மாணவர், “கலைஞர் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சியை பார்த்து கட்சிக்கு வந்தவர்கள் நாங்கள். திரைப்படத்திற்கு விசிலடித்து வந்த விசிலடிச்சான் குஞ்சுகள் இல்லை நாங்கள். எங்களுக்கு கொள்கைதான் முதலில்.
திரையில் பார்ப்பது எதுவும் தரையில் நன்றாக இருக்காது. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட போது விஜய் எங்கு போனார்? விஜய் விமானத்தில் ஏறி ஒரு நடிகையின் திருமணத்திற்கு சென்றார். நிவாரணப் பொருட்கள் கொடுப்பதாக கூறி ஒரு காமெடி செய்தார். விஜய்யை பொறுத்தவரை அரசியலில் அவர் ஒரு காமெடியனாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்” என்று விஜய்யை விமர்சித்து பேசினார்.